இராணுவப் புலனாய்வாளர்களால் திருமலை இளைஞர் யுவதிகளுக்கு கொலை அச்சுறுத்தல்

திருகோணமலை குச்சவெளிக் கிராமத்தினைச் சேர்ந்த பதினொரு பேர் கொழும்பு விசேட புலனாய்வுப் பிரிவினால் தீவிர விசாரணைக்கு உட்படுத்தப்பட்டதுடன் கொலை அச்சுறுத்தலும் விடுக்கப்பட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

இச்சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது,

கொழும்பு விசேட புலனாய்வுப் பிரிவினைச் சேர்ந்த 21 பேர் கொண்ட குழுவினர் திருகோணமலையில் உள்ள இராணுவத்தினர், கடற்படையினர் மற்றும் பொலிஸாரின் துணையுடன் குச்சவெளிக் கிராமத்திற்கு நேற்று முற்பகல் 9 மணியளவில் சென்று, அதே கிராமத்தினைச் சேர்ந்த பதினொரு இளைஞர்களையும் யுவதிகளையும் அழைத்துத் தனித்தனியாக தீவிர விசாரணைகளுக்கு உட்படுத்தியிருக்கின்றனர்.

விடுதலைப்புலிகள் பலமாக இருந்த காலப்பகுதியில் விடுதலைப்புலிகளுக்கு உதவி செய்யதாகத் தெரிவித்தே இவர்கள் மீது விசாரணை நடத்தப்பட்டிருக்கின்றது.

இனிவருங்காலங்களிலும் விடுதலைப்புலிகளுக்கு உதவி புரிந்தால் ஒவ்வொருவரும் வெட்டப்பட்டு சந்திகளில் வீசப்படுவீர்கள் என்று புலனாய்வு பிரிவினரால் எச்சரிக்கப்பட்டிருக்கின்றது.

இதன் போது விசாரணையை எதிர்கொண்டவர்கள், விடுதலைப்புலிகளை அழித்ததாக படைத்தரப்பும் அரசாங்கமும் தெரிவித்து வருவதனை சுட்டிக்காட்டியிருக்கின்றனர். அதற்கு பதிலளித்த விசாரணையாளர்கள் விடுதலைப்புலிகள் மீளவும் வந்தால் அவர்களுக்கு உதவி புரியக்கூடாது என்று தெரிவித்திருக்கின்றனர்.

இதேவேளை நேற்று முற்பகல் 9மணிமுதல் இரவு 9மணிவரை இளைஞர்களும் யுவதிகளும் தடுத்துவைக்கப்பட்டிருந்தமையால் அச்சமடைந்த பெற்றோர் திருகோணமலைக்குச் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தனின் கவனத்திற்கு இச்சம்பவம் தொடர்பில் தெரியப்படுத்தியிருக்கின்றனர்.

சம்பந்தன் திருகோணமலை பொலிஸ் நிலையத்திற்குச் சென்று இது தொடர்பில் கலந்துரையாடியதாகவும் விசாரணையின் பின்னர் அவர்கள் விடுதலை செய்யப்படுவர் என்று சம்பந்தனுக்கு பொலிஸாரால் வாக்குறுதி வழங்கப்பட்டதாகவும் திருமலைத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

Add comment


Security code
Refresh

சமூக தளங்களில் பகிர