பூவரசு பூக்கும் பூமிக்கு வெள்ளரசு விலங்கிட முடியுமா...?
அலரிமாளிகைக் கூரைமீதெழுந்து
அலைவரிசையில் மிதந்ததோர் அசரீதி.
“தமிழரின் மெளனம் கலையும் தருணமிது.
புலிகளுக்கெதிராக எல்லோரும் பேசவேண்டும்”.
சந்திரிகாவின் சத்திய வசனமிது.
பிரபாகரனுடன் பேசி
பிரச்சனைக்குத் தீர்வென்ற சீமாட்டிக்கு
இந்த வசனத்தை எழுதிக்கொடுத்தது யார்?
வாசல் தோறும் வாக்குக் கேட்ட போது
பேசியது என்ன?
காவியுடைகள் கூத்தாடத் தொடங்கியதும்
கூறுவது என்ன?
சூத்திரதாரி யாரென்று தெரிந்து விட்டது.
மேசைக்கு கீழே `நீலனின்` கால்கள்.
வேறோன்றுமில்லை
`கதிர்காமத் தம்பிரானின்` திருவோடு யாசகம்
உத்தமியை உரத்துப் பேச வைகிறது.
கொழும்பிற் தொங்கும் `துரோகவெளவால்கள்`
சொன்னதைச் செய்யும்மென்ற துணிவு
சந்திரிகாவை சண்டித்தனத்துக்கு தூண்டுகிறது.
என்ன செய்வது?
எட்டப்பர்களால் இடிந்த வரலாற்றில்
இன்னொரு அத்தியாயம் இது.
சரி, சரி கிடக்கட்டும்
எரியுண்டு போகுமா எம்மண்?
நடவாது.
பூவரசு பூக்கும் பூமிக்கு
வெள்ளரசு வந்தா விலஙிக்ட முடியும்?
மழைநீரால் மட்டும் பயிர்செய்யும் பூமியிது.
அசையாதென்பதறிக.
“பாறை பிளந்து பயனெடுக்கும்” தாய் வயிறு
பணியாதென்பதெம் பாடல்.
ஒத்தியெடுத்து ஊற்றுவாய் அடைத்தாலும்
வேர்கசிந்து நீர்பரவும்.
எந்நாட்டு மக்களையும் எம்தேசம் வரவேற்கும்.
படையோடு வருபவர்க்கெம் தலைவாசல் மரமிடிக்கும்.
`குமாரதுங்காவின் குடும்பத்தலைவிக்கு`
யாரேனும் இதனை அறியக் கொடுத்திடுக.
மத்திய வங்கிமீது இடித்தவர் எவரோ?
ஆர் செய்தாரே நாமறியோம் பராபரமே.
என்றாலும்
குண்டுவெடிப்பென்றால் என்னவென்று
கொழும்புக்கும் தெரியட்டும்.
குருதிவெள்ளம் கொழும்பில் வழியும் போதே
அவலவென்றால் என்னவென்று அரசுக்குப் புரியும்.
`நவாலிப் படுகொலையும்`
`நாகர்கோவிலில்` நாம் கொடுத்த விலையும்
சந்திரிக்காவின் சமயலறைக்குத் தெரியாது.
`சிலிங்கோ மாளிகை`ச் சிதறல்கள்
`ஜனாதிபதி இல்லத்திலும்` விழுந்திருக்கும்.
எடுத்துப்பார்த்தாவது எம்துயர் அறியட்டும்.
வலிகாமம் போனதால்
நாம் மனம் இடிந்து போகவில்லை.
புலிவாலைப் பிடித்தோமென்று பேசுவதும்
எமக்குக் கோபமல்ல….
இளித்தவாய்த் தமிழருக்கு
அள்ளிக்கொடுக்க வந்த `அமுதசுரபி`யென்று
தீர்வொன்றைச் சொல்வதே சினமூட்டுகிறது.
பிறந்தமண்ணில் வாழப் “பெமிசன்” எடுப்பதிலும்
இறந்து படல் சிறந்தது.
திணிப்புக்குப் பெயர் தீர்வு என்றால்
தீர்வுக்குச் சிங்களத்தில் என்ன பெயர்?
நேற்றுவரை
அதிகாரமட்டத்திலிருந்த ஆதிக்கவுணர்வை
“வெள்ளைப்புறா” மூலம் வீதிக்குக் கொண்டு வந்ததே
சந்திரிக்காவின் சாதனை அரசு தான்.
ஆள்வந்தவன் சிங்களவன்,
அடிமையானவன் தமிழனென்று,
பேசவைத்த பெருமையும் பெருமாட்டிக்கே சேரும்.
பேச்சுவார்த்தை மேசையின் கால்களை முறித்து
வெட்டரிவாளுக்குப் பிடிபோட்ட `வெண்புறாவே`
ஒன்ருணர்க.
கருங்கல்லு உடையுமன்றி வளையாது.
கண்ணாடி சிதறுமேயன்றி நெளியாது.
இதுஉணர்ச்சிவசமான உரையல்ல………
பிரபாகரனின் `பொலிசி`
“புலிகளை சித்திரைக்கிடையில்
தீர்த்துக் கட்டுவேன்” என்றார்
ரத்வத்தை.
முடிசூடிய மன்னனுக்கு தலைபிசகிய கதைபோல
மந்திரி மாமனுக்கு மாதங்கள் மறந்துபோச்சு.
தேரும், குதிரையும், சிம்மாசனக்கதிரையும்
மாப்பிள்ளை மிடுக்கானது மந்திரிக்கு………
`தமிழர் தொட்டழிப்பை முடுக்கிவிட்ட அக்காவுக்கு`
ஆடியடங்கும் வயதில் ஆயுர்வேத வைத்தியம்.
கோட்டையைப் பிடித்துக் கொடியேற்றி வைத்துவிட்டு
வேட்டை நாய்களுக்கு விருந்து வைத்த போது…..
புலிகளை அழிக்காதுவிடேன் என்று
புலம்பியதாய் அறிந்தோம்.
காற்றுலவும் வெறும்தரையில் காலை வைத்டுவிட்டு
பீற்றிக்கொள்ளும் `பெருந்தகையே`!
தமிழரின் உதிரத்துளி ஒவ்வொன்றுக்கும்
பதிவேட்டில் வரவுண்டு.
காலம் ஒருநாள் கணக்குக் கேட்கும்.
சத்தியத்தை வெட்டியழித்து விடுவதென்பது
நிச்சயம் நடவாது.
புத்தபிரான் சொன்னதிந்தப் போதனை.
தாமரைத் தட்டேந்தும் தளபதிகளுக்கு
இதைப் போதிக்க யாருமே இல்லையா?
புலிகள் வேறு தமிழர் வேறு என்பவர்களே
புரிந்துகொள்ளுங்கள்.
வலிகாமம் வெளியேறிய பின் எத்தனை வாக்குறுதிகள்.
ஒருவராயினும் உள்ளே வந்தார்களா?
ஆயிரம் முரண்பாடுகள் எமக்குள் இருந்தாலும்
அண்ணண் தம்பி உறவெமக்கு.
ஒன்றென்றா துடிக்கும் உதிரத்துடிப்பு.
வீடிழந்துபோன “வெப்பிசாரத்தில”
யாராயினும் ஒரிருவர் பேசியிருக்கலாம்.
அதை வைத்தா முடிவெடுத்தீர்?
அட பாவமே!
நெருப்புக் குளித்து நிமிரும் திறன் படைத்த
கறுப்புப் பறவைகள் நாம்.
மானமிழந்து மாற்றானின் மடிகிடக்கும்
ஈனர் சிலரிங்கே இன்னும் இருக்கின்றார்.
நீலன்,
கதிர்காமர்,
சிவசிவா…… இப்படியாய்…
தலையில் ஓரிரண்டு நரைமயிர் போலா
இவர்கள் சில பேர்கள்.
எச்சிலிலையையே எதிர்பார்க்கும் இவர்களையா
தமிழரென நம்பித் தடம்புரண்டீர்?
ஒன்றுரைத்தோம்.
எம்மண்ணில் வேரைத்தறித்தால் விழுதிலிருந்து துளிர்த்திடுவோம்.
விழுதைத் தறித்தாலோ வேரிலிருந்து தளிர்த்திடுவோம்.
காற்று மீதாணை.
கடல் மீதாணை.
போற்றுதற்குரிய நம்பொன் மண்மீதாணை.
ஆற்றலன் எம் தலைவன்
அண்ணல் மீதாணை.
படைதிரட்டி உடனெழுவோம்.
பகையழித்து ஊர்புகுவோம்.
- பங்குனி 1996 -


