தென்பகுதி மீனவர்களுக்கு எதிராகப் போராட்டம் நடத்த முடிவு செய்த வடமராட்சி மீனவர்கள்!!
திங்கட்கிழமை, 07 வைகாசி 2012 21:25
வடமராட்சி கிழக்கில் மீள்குடியேற்றப்படாத கேவில் பகுதியில் தென்பகுதி மீனவ நிறுவனங்கள் கடலட்டை பிடிப்பதற்கு எதிராக கட்டைக்காடு மீனவ சங்கம் போராட்டம் நடத்த உள்ளதாக கட்டைக்காடு மீனவ சங்கம் இன்று திங்கள்கிழமை அறிவித்துள்ளது.
தேச வழமைக்கேற்ப தென்பகுதி மீனவ நிறுவனங்கள் கேவில் பகுதியில் கடலட்டை பிடிப்பதாயின் அப்பிரதேச சமாசத்தின் அனுமதியுடன் மட்டும் கடற்றொழிலில் ஈடுபட முடியும் என மீனவர்கள் சுட்டிக்காட்டியுள்ளனர்.
கேவில் பகுதி விடுவிக்கப்படாத காரணத்தினாலும் குறைந்தளவில் அப்பிரதேசத்தில் மீனவர்கள் வசிக்கின்ற காரணத்தினாலும் கட்டைக்காடு மீனவ சங்கம் தென்பகுதி மீனவ நிறுவனங்களின் மீன்பிடி தொழிலுக்கு எதிராக எதிர்ப்பு நடவடிக்கையை மேற்கொள்ளவுள்ளதாக மீனவ சங்கப் பிரதிநிதி தெரிவித்தார்.
தென்பகுதி நிறுவனங்கள் கடற்றொழில் செய்வது தொடர்பாக கட்டைக்காடு மீனவ சங்கம் நாளை பொதுக்கூட்டமொன்றை நடத்தி மீனவர்களின் ஒத்துழைப்புடன் எதிர்ப்பு நடவடிக்கையை மேற்கொள்ளவுள்ளதாக மீனவர்கள் தெரிவித்துள்ளனர்.
முன்னர் வடமராட்சிக் கிழக்குப் பிதேசத்தில் இவ்வாறு தென்பகுதி மீனவர்கள் மீன் பிடித்தொழிலில் ஈடுபட்ட போது அப்பிரதேசத்தின் மீனவ சமாசத்தின் அனுமதி இன்றி கடற்றொழிலில் ஈடுபட முடியாதென்று எதிர்ப்புத் தெரிவித்ததைத் தொடர்ந்து தென்பகுதி மீனவர்கள் திரும்பிச் சென்றமை குறிப்பிடத்தக்கது.
மீள்குடியேற்றப்டாத கடற் பிரதேசமாகிய கேவில் பிரதேசத்தில் கடலட்டை பிடிக்கும் தொழிலில் தென்பகுதி மீனவர்கள் தற்போது ஈடுபட்டுள்ளதாக கட்டைக்காடு மீனவர் சங்க உறுப்பினர் மேலும் தெரிவித்தார்.