முகநுால் பதிலுரை -1

கவனம், புதிய சாளரம் ஒன்றில் திறக்க. PDFஅச்சிடுகமின்னஞ்சல்

எழுதலாமா? வேண்டாமா? மீண்டும் இது தேவையா? நாம இருக்கிற நிலையில இப்போது இதை எழுதத்தான் வேண்டுமா? போன்ற பல கேள்விகளால் அலைமோதப்பட்டு நீண்ட தயக்கத்தின் பின்னர், எழுதிவிடுவோம் என்று தோன்றியதாலும், இந்த இரவு உறக்கத்தைத்தொலைத்த மற்றொரு இரவாக இருப்பதால், உறக்கம்வரும்வரையிலும் ஏதாவது செய்தாகவேண்டுமே என்ற மனநிலையில் நான் இப்போது இருப்பதாலும் இந்நிலைச்செய்தியை எழுதத் தொடங்குகிறேன். சில நாட்களுக்கு முன்னர் அசோக் அண்ணா தனது சுவரில் நிலைச்செய்தியொன்றைப் பதிந்திருந்தார்.

 

“சோதிடப்புரட்டு" நூல் - ஒரு பார்வை

கவனம், புதிய சாளரம் ஒன்றில் திறக்க. PDFஅச்சிடுகமின்னஞ்சல்

“சோதிடப்புரட்டு" நூல் - ஒரு பார்வை


 

பிரபாகரன் தமிழர் எழுச்சியின் வடிவம்

கவனம், புதிய சாளரம் ஒன்றில் திறக்க. PDFஅச்சிடுகமின்னஞ்சல்

'பிரபாகரன் தமிழர் எழுச்சியின் வடிவம்’ என்ற இந்த நூல் முதல் பதிப்பாக தலைவர் பிரபாகரன் குறித்த சொற்ப செய்திகளுடனும், இயக்கம் குறித்த ஆரம்பகாலச் செய்திகளுடனும் 1988இல் மதுரையில் வெளியிடப்பட்டுப் பின்னர் கூடுதல் செய்திகள், வரலாற்றுப் பின்னணி ஆகியன இணைக்கப்பட்டு 2013ஆம் ஆண்டு பெப்ரவரி மாதம் சென்னையில் வெளியிடப்பட்டது. மீண்டும் திருத்தங்கள், கூடுதல் இணைப்புகள், ஒளிப்படங்கள் சேர்க்கப்பட்டு சென்ற ஆண்டு டிசம்பர் மாதம் ஒரு முழுமையான பதிப்பாக இது தமிழகத்திலும் புலம்பெயர்ந்து தமிழர் வாழும் நாடுகளிலும் வெளியிடப்பட்டது.


 

'விடமேறிய கனவு'

கவனம், புதிய சாளரம் ஒன்றில் திறக்க. PDFஅச்சிடுகமின்னஞ்சல்

குணா. கவியழகனின் 'விடமேறிய கனவு' – ஒரு பார்வை

குணா. கவியழகன் அவர்களால் எழுதப்பட்டு அகல் பதிப்பகத்தினரால் இம்மாதம் வெளியிடப்பட்டுள்ள 'விடமேறிய கனவு' என்ற இந்த இலக்கியப் படைப்பு, போரின் பின்னரான போராளிகளின் பாடுகளை ஆவணப்படுத்தி அதன் பின்னரான அரசியல் பாதை குறித்துச் சிந்திக்க வைக்கிறது எனலாம்.


இதில் சொல்லப்படும் கதை நடப்பது 2009மே மாதத்திற்குப் பின்னரான காலமாகவும், கதைக்கான பின்னணி சிறைமுகாமாகவும் இருந்தாலும் கதைசொல்லியின் குழந்தைப்பருவ, இளமைக்கால, போர்க்கால அனுபவங்களைத்தொட்டபடியும், சக போராளிகளின் வாழ்வனுபவங்களைத் தொட்டபடியும், அவ்வனுபவங்களினை அலசி ஆராய்ந்து அரசியல் பேசியபடியும் பயணிக்கும் இலக்கியம் இதுவெனக் கொள்ளலாம். நூல் முழுதும் ஒரு கவித்துவ, தத்துவார்த்தமொழி வெளிப்பட்டிருந்தாலும் மிக எளிய மொழிநடையில் கோர்க்கப்பட்ட வலிமிகுந்த அனுபவப்பதிவு இது.


தன்னினத்தால் போராளியாக மதிக்கப்பட்டு, போற்றப்பட்டு, உலகத்தால் பயங்கரவாதியென முத்திரை குத்தப்பட்டு, எதிரியால் கைதியாகத் தடுத்து வைக்கப்படும் சூழ்நிலையில்,பல மனநிலைகளை எதிர்கொள்ளவேண்டிய ஒரு கதாபாத்திரமே - கதைசொல்லியும் ஏனைய கதாபாத்திரங்களும். ஆனாலும் அவர்கள் தத்தம் சுயத்துக்குள் உருக்குலையும் பொழுதுகளில் அவர்களுள் உறைந்து அல்லாடும் 'போராளி' இடையிடையே வெளிப்படுவதை அவர்களால் தடுக்கமுடியவில்லை. ஆக, போராளியாக இருப்பதால் போராட வந்தவன் தொடங்கி, கட்டாய ஆட்சேர்ப்பில் போராளியாக்கப்பட்டவன்வரை அந்த சிறைமுகாமில் தடுத்து வைக்கப்பட்டிருக்கும் அவர்கள் அனைவருக்குள்ளும் இருக்கும் 'போராளிகள்தான்' இந்நாவலின் கதாபாத்திரங்கள்.ஆசிரியரது முதலாவது நாவலான நஞ்சுண்டகாட்டைப்போலவே இதிலும் கதைசொல்லி ஒருவரின் பார்வையிலேயே சிறையில் விரிகிறது கதை. பதின்மவயது தொடங்கி ஏறக்குறைய வாழ்வின் 20ஆண்டுகளைப் போராட்ட களத்திலேயே அர்ப்பணித்து இன்று எதிரியின் வதைமுகாமில் கைதியாக இருக்கும் கதைசொல்லியுடனான - பிற கைதியாக்கப்பட்ட போராளிகளின் தொடர்பாடலும், அவர்களது பின்புலமும், அவலமும், எதிர்காலம் அறியா நிலையும்தான் கதைக்கரு.


சிறைப்பட்ட காலத்திலிருந்து கதைசொல்லியின் குழந்தைப்பருவத்துக்கும் பதின்ம வயதுக்கும் அவ்வப்போது கதை தாவுகிறது. அப்படித்தாவும்போது கைதியல்லாத வேறு கதாபாத்திரங்களும், சம்பவங்களும்; கதைசொல்லியின் வாழ்வில், உணர்வில், செயற்பாட்டில், நடவடிக்கையில், சிந்தனையில் ஏற்படுத்திய பாதிப்பினையும் தொட்டுச்செல்கிறது கதை.


'மகத்துவம் நிறைந்ததாக நான் எண்ணிய வாழ்வு சபிக்கப்பட்ட வாழ்வாக என்னைத் திருகும் இந்த நிலையின் வலி கடந்த மூன்று நாட்களில் நான் வாங்கிய சித்திரவதைகளின் வலியைவிட என்னை ரணப்படுத்துகிறது. இதை உங்களுக்கு எப்படிப் புரியவைப்பது என்று தெரியவில்லை. ஒரு கூட்டுவெற்றியில் தனிமனிதப் பங்காளர்களுக்கு உரித்தான பங்கு கிடைப்பதில்லை. ஆனால் கூட்டுத்தோல்வியில் தனிமனிதனுக்கு உரித்தானதற்கும் அதிகமான பங்கின் விளைவை அவன் சுமக்க நேர்கிறது' என்று தொடங்கும் சிறைவாழ்வு பற்றிய கதைசொல்லியின் வார்த்தைகள் நாவல் முழுதும் தெறித்துக்கிடக்கும் அந்தக் கூட்டுத்தோல்வியின் வலியைத் துல்லியமாக எடுத்து இயம்புகிறது எனலாம்.


தன் இன மக்களால் மீட்பர்களாக, போராளிகளாக மதிக்கப்பட்டு, உலகத்தால் பயங்கரவாதி முத்திரை குத்தப்பட்டு, எதிரியால் கைதியாக்கப்பட்டு அடைக்கப்படும்போது அந்நிலைக்குப் பொருந்தாத, பொருத்திக்கொள்ளமுடியாத தன்மையே கதாபாத்திரங்கள் அனைவரிடமும் ஆரம்பத்தில் இருந்ததை அவதானிக்கலாம். ஆனால் கதை செல்லச்செல்ல கதாபாத்திரங்களின் தன்மையிலும் மாற்றங்கள் ஏற்படுகின்றன. தமது நடிப்பின் மூலம் அந்தக் கட்டாய சூழ்;நிலைக்குள் தம்மைப் பொருத்திக்கொள்ள முயற்சி எடுக்கும் சிலர், பொருத்திக்கொள்ள முயற்சிகூட எடுக்க முடியாமல் தவிக்கும் சிலர், உள ரீதியாகப் பொருத்திக்கொள்ளமுடியாமல் அதனைத் தவிர்த்து, தோற்றத்தை அதற்கேற்ப மாற்றிக்கொள்ள எத்தனிக்கும் சிலர் என ஒவ்வொருவரும் வௌ;வேறு நிலைகளில் தத்தளிக்கும் தன்மையை, மாற்றங்களை கதாபாத்திரங்களில் காணலாம்.


தவிர, உணர்வுகளிலும் ஏக்கம், அங்கலாய்ப்பு, சினம், இயலாமை, வெறுமை என மன உணர்வுகள்; மாறி மாறி அவர்களை சாய்க்கின்றன. 'அகமும் புறமும் அறமும் திருவும் - அழியக் கண்டேனே, கண்டேனே!' என்று 'அழியக்கண்டேனே அழியக் கண்டேனே' என முதலில் துக்கிக்கும் ராசு அண்ணர் என்ற கதாபாத்திரம், சிலநாட்களின் பின்னர் அதனைச் சிறிது மாற்றி, 'அகமும் புறமும் அறமும் திருவும் - ஒளிரக் காணேனோ? காணேனோ?' என்று அங்கலாய்ப்பதை இதற்கு எடுத்துக்காட்டாகக் குறிப்பிடலாம்.


தம்மைத் தாமே தக்கவைக்கும் அவலமான, வேதனையான சூழலில் எதிரியின்முன் கைகட்டி மனம்நொந்து கொண்டிருக்க, அதைத் தனது வலிமிகுந்த வார்த்தைகளில், 'சுயமானத்தைக் கடந்து பொதுமானத்தைச் சிந்திக்க முடியாது. சுயமானம் நிறைவுற்றே அது பொதுமானம் நோக்கி விரிவடையும். பொதுமானத்தின் இழிவுகண்டு போராளியாகியவர், தாம் போராடியதற்காக சுயமானத்தையும் அற்பர்களின் காலடியில் இழக்க நேரிடும்போது உருவாகும் வலி இருக்கிறதே, ரணத்தில் காய்ச்சிய எண்ணெய் ஊற்றுவது போன்றது அது' என்று கொந்தளிக்கும் கதைசொல்லி, ஒரு போராளியின் மனப் போராட்டத்தை, வலியை படிப்போர் மனங்களில் பதியவைத்துக் கலங்கவைக்கிறார்.


'தர்மம் ஒரு வாழ்வின் பொய்யோ?' என்ற கேள்வியுடனும், 'வரலாறு வெற்றிடங்களைவிட்டு வைக்காது' என்ற நம்பிக்கையுடனும் நிறைவுறுகிறது கதை.


இறுதியில் கண்டி, மட்டக்களப்பு, யாழ்ப்பாணம், புகலிடம், தமிழ்நாடு என்று ஒவ்வொரு மூலையாகப் பிரிந்துசெல்லும் போராளிகள், இந்த ஐந்தும் குவிந்து இணைந்து போராட்டத்தில் ஏற்படுத்தவேண்டிய மாற்றத்தின் தேவையை, கட்டாயத்தை அரசியல்செய்தியாகவும் சொல்லி நிற்கிறார்கள் எனலாம்.


'போராளிகள் எதிர்கொள்ளும் தனிமை என்பது சாதாரண மனிதர்களின் தனிமை இல்லை. பழக்கமாகிப்போன போராளி வாழ்விலிருந்து விடுபடுவது இலகுவானதல்ல, கைதியாகவே வாழ்ந்திருக்கலாமோ? வாழ்வென்பதே உறவாடல்தானே.. தன் சூழலையும் சூழலில் தன்னையும் பிணைந்து ஊடாடுவதே உறவு. உறவுறாத மனதைக் கொண்டு வாழ்வதுதான் எப்படி? என் போராடும் இயக்கம் இல்லை. என் தோழர்கள் இல்லை. என் போராட்டம் இல்லை. என் மக்கள் இல்லை. எதனுடன் உறவுறுவேன் நான்?' என்ற வலிசுமந்த வார்த்தைகளின் மூலம் போராளிகளின் மனக்கிடக்கையை, வேதனையை ஏந்தி நிற்கிறது இப்படைப்பு.


இலகுவான மொழி, தெளிவான மொழிநடை, மேன்மையான விவரிப்புமொழி போன்ற அறிவார்ந்த அம்சங்களும் நகைச்சுவை, தந்திரம், வேதனை போன்ற உணர்ச்சி மேலிடவைக்கும் பக்கங்களும் நாவலில் பரவலாக இடம்பெற்றிருந்தன. பொருள் இழையோடும் வசனங்கள்;, ஓர் இசையின் அசைவு போன்ற கவித்துவமான மொழி, எழுத்துநடையில் ஒரு மெட்டு போன்ற கலைசார் அம்சங்களும், அழகான, எளிமையான குறியீட்டுமொழியும் நாவலுக்கு சிறப்புச் சேர்த்தன.


வசனங்கள் மிகவும் அருமை. தான் எழுதுவதை அல்லது சொல்லவருவதை ஆசிரியர் அப்படியே வாசகர்களுக்கு காட்சிப்படுத்தியதுபோன்ற பிரமை நூல் முழுதும் பரவியிருந்தது. கதை சிரிக்கவும் வைத்தது, அழவும் வைத்தது. கதையோட்டம் நாம் கற்பனை செய்யக்கூடிய வகையில் இருந்தாலும் எதிர்பாராத திருப்பங்கள் ஆர்வத்தைத் தூண்டின. கதாபாத்திரங்கள் அனைத்தும் உண்மையான மனிதர்கள் போன்ற தோற்றத்தையே படிப்போருக்குத் தந்தது.


போருக்குப் பின்னரான போராளிகளின் பாடுகளே கதையின் பாடுபொருளாக அமைந்திருந்தாலும் போருக்குப் பின்னரான அரசியல் இங்கு குறியீடாகவும் விரிகிறது என்று சொல்லலாம். ஒரு கனவு, அதில் விடம் பாய்ந்துள்ளது, நாம் என்ன செய்யப்போகிறோம் என்பதே படிப்போர் முன் வைக்கப்படும் கேள்வி.


ஆசிரியர் தான் சொல்லவந்த பாடுபொருளை மிகச்சரியான முறையில் தீட்சண்யமான பார்வையுடன் வாசகர்களிடம் ஒப்படைத்திருக்கிறார் என்றே நான் நம்புகிறேன். அது சிறந்த முறையில் வாசக நெஞ்சங்களைச் சென்றடையும் என்பது என் நம்பிக்கை. ஆசிரியர் எழுப்பும் கேள்விகளுக்கு என்னிடம் பதிலில்லை. நம் யாரிடமும் பதில் இல்லை. ஆனால் இதை வாசிப்பவர் எத்தரப்பட்டவராக இருந்தாலும் ஆசிரியர் முன்வைக்கும் கேள்விகள் நியாயமானவையே என்ற உணர்விலிருந்து முரண்பட மாட்டார்கள் என்பதே என் கருத்து.போருக்குப் பின்னரான பிற நூல்கள் என்று பார்த்தால் தமிழ்க்கவி அம்மாவின் 'ஊழிக்காலம்', தீபச்செல்வனின் கவிதைத் தொகுப்பான 'கிளிநொச்சி – போர் தின்ற நகரம்', நிலாந்தனின் 'யுகபுராணம்' கவிதைத்தொகுப்பு ஆகியவையே நான் வாசித்தவை. இவற்றுள் ஊழிக்காலம் போர்முடிந்த காலப்பகுதியில் தொடங்கினாலும் போரின்போதைய காலப்பகுதியிலேயே பயணிக்கிறது. தீபச்செல்வனின் கிளிநொச்சி – போர் தின்ற நகரம், மற்றும் நிலாந்தனின் யுகபுராணம் என்பனகூட பெரும்பாலும் மக்களின் பாடுகளையே தாங்கிவந்தன. ஆக போரின் பின்னரான பாடுகளை, அதுவும் போராளிகளின் பாடுகளைத் தாங்கிவந்த படைப்பிலக்கியங்கள் எனப் பார்ப்போமாயின் அந்த வரிசையில் முதல்நூலாக, ஆவணமாக இது மட்டுமே இதுவரை இடம்பெற்றுள்ளது என்றுதான் சொல்லக்கூடியதாகவுள்ளது.


சுருக்கமாகச் சொல்லவேண்டுமானால், இந்த இலக்கியப் படைப்பு, தமிழர்களாகிய எமது இன்றைய இழிநிலைக்குக் காரணமான தோல்வியை ஆராய்கிறது, மகத்துவம் நிறைந்ததாக எண்ணிய வாழ்வு சபிக்கப்பட்ட வாழ்வாக மாறியதன் வலியை ஆராய்கிறது, தர்மம் ஓர் வாழ்வின் பொய்யோ? என்று கேள்விகேட்கிறது, அதிகாரமும் அது தரும் கர்வமும் எப்படித் தன் பிடியில் அனைவரையும் கீழ்ப்படிய வைத்திருக்கும் என்பதை ஆராய்கிறது, போராளி-பயங்கரவாதி-கைதி என முத்திரை குத்தப்படும் நிலையில் ஒரு தனி மனிதன் அடையும் மனநிலைகளின் வேறுபாட்டையும், மன அழுத்தத்தையும் ஆராய்கிறது, தமக்கொவ்வாத சூழலில் தம்மைப் பொருத்துவற்காய் தம் நடத்தையில்; ஒவ்வொரு மனிதனும் ஏற்படுத்தும் மாற்றங்களை அலசுகிறது, கட்டாய ஆள்சேர்ப்பு இயக்கத்தினுள், அதன் மனித விழுமியங்களுள், போராட்ட மனநிலையில், வாழ்வியலுள் ஏற்படுத்திய அழிவுநிலையை உற்றுநோக்குகிறது, அனுபவம் அறிவாக்கப்பட வேண்டிய கட்டாயத்தை எடுத்துச் சொல்கிறது, ஏதுமறியா நிலைதரும் இயலாமை குறித்துப்பேசுகிறது, இறுதியில் இத்தனைக்கும் மத்தியில் கதைசொல்லியான தான் இன்னும் உயிருடன் இருப்பதற்கும் ஏதாவது காரணம் இருக்குமோ என்று தன்னைத்தானே கேள்விகேட்பதுடன் நிறைவடைகிறது கதை.


எடுத்தவரை தான் பகிர நினைத்த வலி, உடல்-உள அழுத்தங்கள், சமூக, தத்துவ நோக்குகள், முன்வைக்க நினைத்த அரசியல் என அனைத்தினையும் இந்தப் புனைவு இலக்கியம் ஊடாக நிறைவாகவே செய்திருக்கிறார் ஆசிரியர்.


இது இலக்கியமாயினும் வரலாற்றின் பதிவுதான். வரலாறு இலக்கியமாக்கப்பட்டதன் கோர்வை இது. வரலாறு, மக்களுக்குப் புரிந்த, இலகுவான மொழியில் மக்களைச் சென்றடையவேண்டும் என்ற அவாவின் பதிவு இது. புனைவும் இருப்பதால் இது வரலாறாக முடியாமல் போகலாம். ஆனாலும்; இது புனைவு இலக்கியமாய் காலத்தை வென்றுநின்று போற்றப்படும். காலத்தால் வெறும் கதையாக, இலக்கியமாகக் கடந்துபோகமுடியாத வரலாறாகவும் இது இருக்கும்.

இதனைப் பதிவாக்கக்கூடிய தகமையும், மொழிவல்லமையும், அனுபவமும், எழுத்துவன்மையும், அர்ப்பணிப்பும் ஒருசேரப்பெற்ற குணா. கவியழகன் இதனைச் சரிவர முன்னெடுத்துள்ளது மட்டுமல்லாது, அதனை நிறைவாகவே பதிவாக்கியிருக்கிறார்.


இது நாவலாயினும் தமிழ்த்தேசிய விடுதலைப்போராட்டத்தில் இது ஒரு முக்கிய நூலாக, ஆவணமாக அமையும். இது காவிவந்துள்ள செய்திகளும், அரசியலும் தமிழர்கள் அனைவரும் தெரிந்துகொள்ளவேண்டியது. பகிரவேண்டியது.


விடமேறிய கனவாகிப்போன அந்தக் கனவினின்றும் விடத்தைப் பிரித்தெடுக்கமுடியாது போயின் அக்கனவே விடமாகிக் காலச்சுழற்சியில் கலைந்தும் போய் விடும் என்பதைக் கருத்தில் கொண்டு, ஆசிரியர் தனது என்னுரையில் கூறியிருப்பதுபோல எம் அனைவரதும் கையில் உள்ள அந்த 'அகல்விளக்கின்' கடைசிச் சுடர்பொறியை அணையாது பாதுகாப்போம்.


- அன்பு -

 

 

மேலதிக ஆக்கங்கள்...

பக்கம் 1 - மொத்தம் 207 இல்

<< தொடக்கம் < முன் 1 2 3 4 5 6 7 8 9 10 அடுத்தது > முடிவு >>